*அறியாமை*
அறிவை அறியாதிருப்பது. அறிந்தாலும் தெளிவில்லாதிருப்பது. அச்சப் படுவது. அறிவுத் திடமின்றிருப்பது. அறிந்ததை சொல்லிக் கொடுக்க தெரியாமலிருப்பதும் அறியாமையே. அறிவு வளம் குன்றி இருப்பதும் காரணமாகிறது அறியாமைக்கு.
*அறிவின் நோக்கம்*
ஆறாவது அறிவின் நோக்கமென்ன என உணராதும் அறியாமலும் இருப்பதே உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும். சிக்கலுக்கும் காரணம். மனித அறிவு அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து பேரறிவின் பூரணத்தையும் இயற்கையறிவின் செயலின் விளைவையும் உணர்ந்து, எண்ணத்தூய்மை, வினைத்தூய்மை, கருமையத்தூய்மை பெற்று, பாவப்பதிவையும் கலங்கங்களையும் நீக்கி இறையுணர்வு பெறுவதே வாழ்வில் ஆறாவது அறிவுன் நோக்கம்.
*அறிவு வளம்*
இவ்வாறாக ஆறாவது அறிவை இயற்கை அறிவோடு இணைந்து ஒத்து வாழச் செய்யும் உள் உணர்வு கல்வியை உலகம் முழுதும் பெருக்குவதும். அதற்கான புத்தகங்களை நல்ல தெளிந்த விளக்கங்களுடன் எழுதுதல் வேண்டும்.
*அறிவுத் திடம்*
பாதையை, வாழ்வின் பாதையை மாற்றாது, நோக்கம் மறக்காது அறிவின் நுட்பத்தை பெருக்கி கலங்கங்கள், மயக்கங்கள், சிக்கல்கள், பாவப்பதிவுகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட செயலின் விளைவை உணர்ந்து அயரா விழிப்புடன் பழக்கத்தை மாற்றியமைத்து உறுதியுடன் வாழ்வின் நோக்கத்தின் பாதையில் திடமுடன் பயணிப்பது. பாதை மாறினால் அறிவுக்கு திரும்ப திரும்ப உறுத்துவது அதுவே அறிவுறுத்தல் என்று சொல்கிறோம். தெளிவு, துணிவு, செயலொழுக்கம் என்ற பாதையை விளக்கத்தின் வழி அமைப்பதே அறிவுத் திடம்படுதல் ஆகும்.
*அறிவுத் தெளிவு*
திரும்ப திரும்ப புலன்வழியும் தன்முனைப்பிலும் பழக்கத்தின் வழி செல்லும் மனதை தெளிவுறச் செய்தல் வேண்டும். ஐயமின்றி கற்றல். அடிப்படையில் தெளிவு. குழப்பமின்றி செயல் செய்யல் வேண்டும்.
*அறிவுத் துணிவு*
ஒரு புதிய பாதையை திட்டமிட்டுள்ளோம் அதுவே மனவளக்கலை என்னும் பாதை. அப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் பேரார்வத்தை வளர்த்து. இவை நமக்காக மட்டுமே நாம் செய்யவில்லை இவ்வுலகம் முழுதும் உன்னதமடைய நாமும் உன்னதம் அடையச் செய்கிறோம் என்ற துணிவுடன் செயலாற்ற வேண்டும். இது இறைப் பணி யாராலும் தடுக்க முடியாது. அதுபோல நமக்கு இயற்கை தரும் எதனையும் யாரும் தடுத்து விட முடியாது. அது வந்தே தீரும். நாமே நமக்கு தடையாக அமைந்து விடக்கூடாது. இதுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும், இவ்வளவு வேண்டும் இந்த நேரத்தில் வேண்டும் என்றெல்லாம் தன்முனைப்பால் நாமே நமக்குள் சிக்கலை உண்டாக்கி விடுகிறோம். இயற்கை நியதி மாறாதது. ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்தும் பிறருக்கு சொல்லிக் கொடுத்தும் வந்தால் தன்னால் எல்லா மாற்றமும் இயற்கையே தரும்.
*அறிவை அறி அதுவே அறம்*
அறிவை அறிவால் அறிவதே அறம். அறச் செயலை தொடர பழக வேண்டும். மனதை அறிவுக்குள் புகுத்துவதே திடமான, வலிமையான செயல். மனம் புலன் வழி ஓடியே பலகீனப் பட்டுக் கிடக்கு. வலிந்து நல் பழக்கத்தை பழக வேண்டும் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சிதான் தங்களுக்கு திடம் உறுதி, நுட்பம், வலிமை, தெளி, துணிவு என எல்லாவற்றையும் தரும். பயிற்சி செய்யாது வேறு வழியே இல்லை உய்வுற, முழுமைப் பேறு பெற பழகுவோம் சிற்றறிவை பேரறிவோடு இணைக்கும் உன்னத பணியை தொடர்ந்து செய்வோம் வாருங்கள். அதுவே அறச் செயல்.
வாழ்க வளமுடன்
*பேரா.ச.சாமிநாதன்*
*தஞ்சாவூர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக