செவ்வாய், 13 ஜனவரி, 2015

பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்த நாவல்


கீழுள்ள மக்களுக்கு விடுதலைப் பற்றிய உணர்வையும், விடுதலையும் அளிப்பதே ஆகச் சிறந்த பணியாகும். அப்படி பாட்டாளிகளாய் சுற்றித் திரியும் நிறைய தொழிலாளிகள் நம் நாட்டில் மிக அதிகம். ஒரு இடம் விட்டு பெயர்ந்து இன்னோர் இடத்திற்கு சென்று நிராதரவாக அண்டிப் பிழைக்கும் எத்தனையோ மக்கள் இருக்கும் இந்த நாட்டிலேயே அவர்கள் நிலமற்றவரிகளாகவும், எந்த அரசும் கண்டு கொள்ளாத, பராமரிக்கப்படாத, ஆதரவுமில்லாத, முதலாளிகளாலும் அரசினாலும் சுரண்டப்படும் தொழிலாளிகளைப் பற்றிய நாவல்தான் 'வந்தேறிகள்'. தொழிலாளிகள் என்றால் விவசாய கூலிகள், வீடுகட்டும், மீன் பிடி, தறியோட்டும்,நெசவு செய்யும், தச்சு வேலை செய்யும், துப்புரவு, பிணமெரிக்கும், டீ கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள், அச்சகத்தில் வெலை செய்யும்,கல்லுடைக்கும் தொழிலாளிகள், பாலியல் தொழிலாளிகள், இப்படி எல்லா தொழிலாளிகளின் வாழ்வியல் முறை, அவர்கள் பட்ட துன்பங்கள் என விரிவாக பேசுகிறது நாவல். சேலத்திற்கு அருகிலுள்ள மேட்டூர், மணியம்பாளையம்,கள்ளிப்பாளையம் போன்ற ஊர்களிலிருந்து வந்து சென்னைக்கும் சித்தூரையும் இணைக்கும் நகரம், பேட்டையில் நடக்கும் விசைத்தறி கூலித்தொழிலாளிகளைப் பற்றித்தான் ஆரம்பித்த கதை பின்பு பாலியல் தொழிலாளிகள் படும் வேதனைகளைப் பற்றி பேசி செல்கிறது. கதையில் முக்கிய கதாபாத்திரமே பெண்தான் அதுவும் பாலியல் தொழில் செய்யும் பெண் சரிதா மற்றும் சந்துரு பற்றியதுதான். தொழிலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. அஸ்ஸாம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து சோன் பப்டி, சோளப்பொறி விற்பவர்களாகவும், அழகு நிலையங்களில், பேக்கரியில் வேலை செய்பவர்களாகவும் இருக்கும் அவர்களைப்பற்றி நாம் இந்த நாவலைப் படித்தால் நினைந்து பார்ப்போம் அத்தோடு நில்லாமல் அவர்களுக்கு ஏதாவது செய்வோம். மலேசியாவில் வதைபடும் தமிழகத் தொழிலாளிகள், சவுதியின் அடிமைகளாக ஆசியத் தொழிலாளிகள், உலகெங்கும் சுரங்கங்களில் தம்முயிரை பணயம் வைக்கும் தொழிலாளர்கள், மலிவான சம்பளத்தில் மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நோக்கியாவின் இலாபவெறிக்கு பலியான தொழிலாளி... உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டிய தொழிலாளி வர்க்கம் தன் இலக்கை அடைவது எப்போது?அப்படி அணிதிரளும்போது மட்டுமே மக்களை இன்று கொடூரமாக வாட்டி வதைக்கும் மறுகாலனியாக்கத்தை தடுத்து நிறுத்த முடியும். இது போன்ற வர்க்க போராட்டத்தை கையிலெடுத்து அலசி ஆராயும் நாவல்தான் வந்தேறிகள். சிற்றிலயக்கியங்களிலும் இந்நாவல் போன்ற தொழிலாளிகளின் வாழ்வியல் முறை சொல்லப் பட்டுள்ளதற்கு ஒரு எடுத்துக் காட்டு பள்ளு நூலில் வேளாண் கூலியின் மதுப்பழக்கம், சக்களத்தியர் ஏசிக் கொள்ளுதல், நில உடைமையாளர் தொழிலாளியைத் தொழுவில் கட்டி அடித்தல் ஆகியன பாடப்பெறுகின்றன. குறவஞ்சி நூலில் மேட்டுக்குடியினரின் காதல், பிரிவுத் துன்பம் ஆகியன ஒருவகையாகவும் எளிய குடியினரின் காதல், பிரிவுத்துயர் ஆகியன வேறு வகையாகவும் காட்டப் பெறுகின்றன. பள்ளு என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. பள்ளங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளியைப் பற்றியது இந்நூல். உண்மையில் இந்நூல் அக்காலச் சமய மாறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதோ முக்கூடற்பள்ளு நூலில் வேளாண் தொழிலாளி எப்படிச் சித்திரிக்கப் பெறுகிறான் பாருங்கள்! வேளாண் தொழிலாளி கறுக்கும் கிடாய் மருப்பின் முறுக்கு மீசையும் - சித்ரக் கத்தரிகை யிட்ட வன்னக் கன்னப் பரிசும் குறுக்கில் வளைதடி சேர்த்து இறுக்கும் கச்சையும் - செம்பொற் கோலப் புள்ளி உருமாலும் நீலக் கொண்டையும் சறுக்கும் தொறும் குதிப்பும் சுறுக்கும் தலை அசைப்பும் தடிசுற்றி ஏப்ப மிட்டே அடிவைப்பதும் மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழகக் குடும்பன் தோன்றி னானே. மேட்டுக்குடி முதலாளி அண்ணாமலை, சுந்தரி புருசன் மற்றும் ரவுடிகள்,நக்கல் காவல் அதிகாரி இணைந்து செய்யும் சூழ்ச்சி, எதிரிகளை ஒழிக்க நினைக்கும் உத்தி, சுரண்டல் என உலகம் முழுவதும் இருக்கும் வர்க்க ஒற்றுமை இந்நாவலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன், விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன் (நன்றி vinavu.com)இதில் யார் வந்தேறிகள் யார் தமிழன். இவர்கள் பண்பாட்டை மறந்த மகா பாவிகள். வந்தேறிகள் யாரும் அன்பு செய்ய மறப்பதில்லை என்று இந்த நாவல் குறிப்பாக சிலர் முகத்தில் காறித்துப்புகிறது. யார் வந்தேறிகள்? அஸ்ஸாமுக்கு வந்த வங்கதேசத்து முஸ்லீம்க்ளா?, அல்ல அங்கிருந்து இங்கே தமிழகத்துக்கு வந்தவர்களா? அல்ல பீகாரிலிருந்து அஸ்ஸாமுக்கு வந்தவர்களா? தமிழகத்திலிருந்து மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களுக்கு சென்றவர்களா? இல்லை தமிழகத்துக்குள்ளேயே திருவாரூரிலிருந்து திருப்பூருக்கு பிழைக்க சென்றவர்களா? இங்கிருந்து இலங்கைக்கு பிழைக்க போனவர்களா? அங்கிருந்து இங்கெ ஏதிழிகளாக வந்தவர்களா? இல்லை கீழத்தஞ்ஞையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் வாடும் மக்களா? இல்லை இந்த கார்பரேட் பரதேசிகளா? யார் வந்தேறிகள் மொழிகள் நம்மை ஒரு வாரியாக பிரித்தாளும், இனம் நம்மை பிரித்தாளும்; ஜாதிகள் வழியாக, மதத்தின் வழியாக பிரிப்பது எது? யார் அதற்கு அடித்தளம்? எந்த பிரிவினர் மட்டும் அனைவரையும் கீழே தள்ளி மேல் உள்ளனர்? பழங்குடினர் ஆட்சி போய், மன்னர் ஆட்சி வந்த பின்னர், அவர்கள் தாங்கள் கடவுளுக்கு அடுத்தப் படியானவர்களாவும், ராஜ தந்திரங்கள் அறிந்தவராகவும் தெரிவிக்கப் பட்டனர். மன்னர்களை வைத்து தங்கள் மொழியையும், வழக்கங்களையும் வளர்த்தது மட்டுமின்றி தங்களுடைய கூட்டத்தாரின் வாழ்க்கை முறைகளையும் உழைப்பே இன்றி பெருக்கினர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்தானே, எங்கே போனது இவர்களின் தேசப்பற்று என்று மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வியையும், இந்த நான்கு முகம் கொண்ட முகமூடி அணிந்த, பசுந்தோல் போர்த்திய சிங்கம் நாமனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பிறந்து பொருளாதாரப் போரில் ஏதிலிகளாகி இங்கேயே நிலமற்று, நிராதரவாக நிற்கும் பாட்டாளி மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் கடும் சாடலுடன் நகர்த்தி செல்கிறது இந்த நாவல். பாலியல் பாட்டாளிகளை சங்கம் கட்ட வைத்த முதல் நாவல் என இதை குறிப்பிடலாம். இரயிலை, அது ஏற்படுத்தும் சத்தத்தைக் கூட கதைக்கு தகுந்தாற் போல் எல்லா அத்தியாங்களிலும் வைத்துள்ளார் அருமை. மேலும் மயில், சரிதா, சந்துருவின் நட்பு அதில் ஒரு முரண் அனைவரும் வந்தேறிகள், அனைவரும் இந்த தேசத்தின் பறவைகள். அந்த புனைவுக்காகவே பாரதிநாதனை பாராட்டாமலிருக்க முடியாது. தறியுடன் நாவலில் இருந்த ஒரு கொதிப்பு இந்நாவலில் ஒரு ஏக்கமாக, சிந்திக்க வைக்கும் ஒரு முயற்சியாக நன்று. இந்த நாவலில் முழுக்க முழுக்க பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்த உத்தி பாராட்டுக்குரியது. மேலும் திருப்பூர் குணா தனது புத்தகத்தில் கூறியுள்ளது போல் இந்த பின் நவீனத்துவ ஆட்கள் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், கவிதை, கட்டுரை எழுதினால் போதும் என்று முடக்கி வைத்துவிட்டனர். அவர்களை வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்த்த கண்களுக்கு இந்த நாவல் திராவகம் ஊற்றி எரிக்கிறது. பெண்களை புரட்சிக்கும், ஆன் சமூகத்திற்கு எதிராக போராடவும் வைத்துள்ளது இந்த நாவலை பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாவல். அதுவும் பாலியல் தோழர்களை போராட்ட களத்தில் நிறுத்தியது சிறப்பு. பெண் விடுதலையென்றால் மாடலாக துணி அணிந்தால் புரட்சி என்று நினைக்கும் பெண்களிடத்தில் இந்நாவலை கொடுக்கலாம். அன்னம்மாள், கோகிலாம்மாள் என விதவை பெண்கள் படும் ஏசல்கள், அவர்கலைப்பற்றிய தவறான் கதைகளை அவர்களே அறிந்தும் அதை அவர்களே கட்டுடைப்பது. ஓபுளி பேச்சு மாதிரிதான் என் பேச்சும் முக்கியான நேரத்தில் எனக்கும் பெயர் மறந்துவிடும். சிற்பியின் கலைக்குழு அமைப்பது அதை விவசாய தோழர்களோடு இணைப்பது. பெரும் புரட்சியாக பாலியல் தொழிலாளி வீட்டில் சாப்பாடு முட்டுமில்லாமல், அவளையே திருமணம் செய்யவது. சரிதாவின் காதைப்புலம் மிகக்கொடுமையானது. அவர்களுக்குள்ளும் மனமிருக்கிறது அந்த மனதிலும் ஆசைகளும் பாசங்களும் நிறைந்தும், அவர்களுக்கு கட்டுப்பாடு இருக்கிறது. சரிதா சந்துருவை விரும்பியதும் அவள் எப்போதும் செல்லும் ஆத்தங்கரைக்கு செல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது இது போன்ற படைப்பு மிகவும் புதுமை. பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய நாவல் என்றதும் விரசம், காமம் நிறைந்த நாவல் என யாரும் தப்பாக கருதி விட வேண்டாம் அப்படி ஒரு இடம் கூட பார்க்க முடியாது. அனுராதா, வசீகரன் உழைக்கும் மக்களுக்காக உழைப்பவர்கள் எல்லா ஊரிலும் உள்ளார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். கடைசி அத்தியாயம் சுபம், சில பைண்டிங் குறைகள்தான் மற்ற குறைகளற்ற நாவல். பொருள் துறைக்கு ஆதார சாதனங்கள் புவிமீது பணமுடையோர்க்கு உரிமை யாச்சு; பொருள்தோற்றம் செல்வந்தர் வணிகர் என்போர் பொறுப்பினிலே வந்ததுபின் உழைப்போர் கட்கு பொருள்தோற்ற மூலதனம் கிட்ட வில்லை பொருளுடையோர்க்கு அடிமைசெய்து கூலி பெற்றார்; பொருள்தோற்ற விற்க சுதந்திரம் இல்லாமல் பொதுவாக உழைப்பாளர் நலிந்து விட்டார். மூலதனமெனில் பூமி, ஆ யுதங்கள், முற்கால அனுபவங்கள், திறமை ஆகும் மூலதனம் தனிமனிதன் உரிமை யானால் முயற்சி இன்றிப் பிறருழைப்பைக் கவர நேரும் மூலதனம் சமுதாய உரிமை யாக முழுவதுமே மதித்திடுதல் சமதர் மம் ஆம் மூலதனம் பணத்தாலே மதிக்கும் போக்கால் முடிவில்லாத் துன்பங்கள் வாழ்வில் கண்டோம். நன்றி - தத்துவஞானி யோகிராஜ் வேதாத்ரி இந்த நாவலுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ ஆனாலும் நாம் படிக்க வேண்டிய கவிதைப் பாட்டு எழுதப்பட்ட விசயம் மார்க்சியம் சார்ந்தது எழுதியவர் ஒரு ஞானி. நாமெல்லாம் சொல்லும் வார்த்தையில் கார்பெரேட் சாமியார் கருத்து எங்கே வேண்டுமானாலும் உதிக்கும் சொல்லப்பட்ட விசயம் பாட்டாளிகளைப் பற்றியது. அது போல இந்த நாவலும் எங்கே என்ன சார்பில் எழுதப் பட்டதென நாம் பார்க்காமல் என்ன எழுதியுள்ளார்கள், யாரைப் பற்றி எழுதியுள்ளார்கள் என பார்ப்போம். யாரோ புனைவு என்று குப்பைகளை நம் மீது பொதி சுமக்க எழுதும் எழுத்தாளர் அல்ல பாரதிநாதன். பாட்டாளிகளை, தொழிலாளிகளைப் பற்றி எழுதும் ஒரு முழு நேர தொழிலாளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக