திங்கள், 26 ஜனவரி, 2015

தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்


குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம். குறிஞ்சி நிலத்தவர் உணவு: சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.) திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169) குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183) மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ). பாலை நிலத்தார் உணவு: ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133). முல்லை நிலத்தார் உணவு; பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445). மருத நிலத்தார் உணவு; மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256). நெய்தல் நிலத்தார் உணவு; நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக