புதன், 1 மே, 2019

அறிவை அறி அதுவே அறம்

*அறியாமை*

அறிவை அறியாதிருப்பது. அறிந்தாலும் தெளிவில்லாதிருப்பது. அச்சப் படுவது. அறிவுத் திடமின்றிருப்பது. அறிந்ததை சொல்லிக் கொடுக்க தெரியாமலிருப்பதும் அறியாமையே. அறிவு வளம் குன்றி இருப்பதும் காரணமாகிறது அறியாமைக்கு.

*அறிவின் நோக்கம்*

ஆறாவது அறிவின் நோக்கமென்ன என உணராதும் அறியாமலும் இருப்பதே உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும். சிக்கலுக்கும் காரணம். மனித அறிவு அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து பேரறிவின் பூரணத்தையும் இயற்கையறிவின் செயலின் விளைவையும் உணர்ந்து, எண்ணத்தூய்மை, வினைத்தூய்மை, கருமையத்தூய்மை பெற்று, பாவப்பதிவையும் கலங்கங்களையும் நீக்கி இறையுணர்வு பெறுவதே வாழ்வில் ஆறாவது அறிவுன் நோக்கம்.

*அறிவு வளம்*

இவ்வாறாக ஆறாவது அறிவை இயற்கை அறிவோடு இணைந்து ஒத்து வாழச் செய்யும் உள் உணர்வு கல்வியை உலகம் முழுதும் பெருக்குவதும். அதற்கான புத்தகங்களை நல்ல தெளிந்த விளக்கங்களுடன் எழுதுதல் வேண்டும்.

*அறிவுத் திடம்*

பாதையை, வாழ்வின் பாதையை மாற்றாது, நோக்கம் மறக்காது அறிவின் நுட்பத்தை பெருக்கி கலங்கங்கள், மயக்கங்கள், சிக்கல்கள், பாவப்பதிவுகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட செயலின் விளைவை உணர்ந்து அயரா விழிப்புடன் பழக்கத்தை மாற்றியமைத்து உறுதியுடன் வாழ்வின் நோக்கத்தின் பாதையில் திடமுடன் பயணிப்பது. பாதை மாறினால் அறிவுக்கு திரும்ப திரும்ப உறுத்துவது அதுவே அறிவுறுத்தல் என்று சொல்கிறோம். தெளிவு, துணிவு, செயலொழுக்கம் என்ற பாதையை விளக்கத்தின் வழி அமைப்பதே அறிவுத் திடம்படுதல் ஆகும்.

*அறிவுத் தெளிவு*
திரும்ப திரும்ப புலன்வழியும் தன்முனைப்பிலும் பழக்கத்தின் வழி செல்லும் மனதை தெளிவுறச் செய்தல் வேண்டும். ஐயமின்றி கற்றல். அடிப்படையில் தெளிவு. குழப்பமின்றி செயல் செய்யல் வேண்டும்.

*அறிவுத் துணிவு*
ஒரு புதிய பாதையை திட்டமிட்டுள்ளோம் அதுவே மனவளக்கலை என்னும் பாதை. அப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் பேரார்வத்தை வளர்த்து. இவை நமக்காக மட்டுமே நாம் செய்யவில்லை இவ்வுலகம் முழுதும் உன்னதமடைய நாமும் உன்னதம் அடையச் செய்கிறோம் என்ற துணிவுடன் செயலாற்ற வேண்டும். இது இறைப் பணி யாராலும் தடுக்க முடியாது. அதுபோல நமக்கு இயற்கை தரும் எதனையும் யாரும் தடுத்து விட முடியாது. அது வந்தே தீரும். நாமே நமக்கு தடையாக அமைந்து விடக்கூடாது. இதுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும், இவ்வளவு வேண்டும் இந்த நேரத்தில் வேண்டும் என்றெல்லாம் தன்முனைப்பால் நாமே நமக்குள் சிக்கலை உண்டாக்கி விடுகிறோம். இயற்கை நியதி மாறாதது. ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்தும் பிறருக்கு சொல்லிக் கொடுத்தும் வந்தால் தன்னால் எல்லா மாற்றமும் இயற்கையே தரும்.

*அறிவை அறி அதுவே அறம்*
அறிவை அறிவால் அறிவதே அறம். அறச் செயலை தொடர பழக வேண்டும். மனதை அறிவுக்குள் புகுத்துவதே திடமான, வலிமையான செயல். மனம் புலன் வழி ஓடியே பலகீனப் பட்டுக் கிடக்கு. வலிந்து நல் பழக்கத்தை பழக வேண்டும் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சிதான் தங்களுக்கு திடம் உறுதி, நுட்பம், வலிமை, தெளி, துணிவு என எல்லாவற்றையும் தரும். பயிற்சி செய்யாது வேறு வழியே இல்லை உய்வுற, முழுமைப் பேறு பெற பழகுவோம் சிற்றறிவை பேரறிவோடு இணைக்கும் உன்னத பணியை தொடர்ந்து செய்வோம் வாருங்கள். அதுவே அறச் செயல்.

வாழ்க வளமுடன்
*பேரா.ச.சாமிநாதன்*
*தஞ்சாவூர்*

எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை,

       எண்ணத்தில் ஒழுங்கு எங்கும்         ஒழுங்கே 
          
 முதல் கோணல் முற்றிலும் கோணல் எனபது போலவே எண்ணத்தில் முதலில் விசம் கலந்தால் முழுதும் மனம் கெட்டு விடும். எண்ணத்தில் ஒழுங்கு, பேச்சில் சொல்லில் ஒழுங்கை கொண்டு வரும். வாக்கினில் ஒழுங்கு வந்தால் செயலிலும் மன எழுச்சியிலும் ஒழுங்கு வரும் என்பதை ஜான். சி. மேக்ஸ்வெல் என்பவர் குழு பற்றிய தனது புத்தகத்தில் சொல்லி வரிசை படுத்துகிறார். மேலும் அதில் சொல்கிறார் ஒழுங்கு என்பது நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்புவதைச் செய்வதற்காக, நீங்கள் உண்மையிலேயே விரும்பாதவற்றைச் செய்வது. அதாவது அற்ப ஆசையான, விருப்பமான, கோக்குமாக்கான, தவறான, சீர்கேடான, துன்பமளிக்கும் எண்ணத்தை கை விடுதல். இதே போல் வேதாத்ரியும் ஒழுக்கத்தின் சாம்யமாக சொல்கிறார். ஒழுக்கம் என்பது தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, உயிருக்கோ துன்பமளிக்காமல் இருப்பதுதான். இது முதலில் எண்ணத்திலிருந்தே தொடங்க வேண்டும். எண்ணத்தால் யாருக்கும் துன்பம் அளிக்காமலும் துன்படுவருக்கு உதவி செய்வதாகவும் இருக்க வேண்டும்.  

• சிந்தனையில் ஒழுங்கு
          தன்னொழுக்கம் இல்லாது தறிக்கெட்டு ஓடும் மனதை நேர்ப்படுத்துவதே ஒழுங்கு. வைராக்கியத்துடன், சமூக பொறுப்புடன், கொள்கைகளுடன் நீ உனது எண்ணத்தை, சிந்தனையை ஒழுங்கு செய்ய வேண்டும். காட்டாற்று வெள்ளம் போல் எண்ணத்தை ஓட விடக் கூடாது அதனை சீர் செய்ய வேண்டியதே ஒழுங்கு அது ஆற்றின் பாதையை சரி செய்து, அணைக் கட்டி வெள்ளத்தை விவசாயத்திற்கு பயன் தருவது போல் எண்ணத்தை, சிந்தனையை ஒழுங்கு செய்யும் போது அது உனக்கும் உன்னைச் சேர்ந்தாருக்கும் பயன் தரும், சமூகம் செழிப்படையும். தினமும் உன் எண்ணத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே இரு, ஓயாதே எங்கே உனது இலட்சியத்திலிருந்து, குறிக்கோளிலிருந்து, பாதையிலிருந்து விலகுகிறாய் என பார்த்துக் கொண்டே இரு. எந்த நேரத்தில் ஒரு எண்ணம் தோன்றி உன்னை துன்பத்திற்கு உள்ளாக்கும் செயலை செய்யச் சொல்லி தூண்டுகிறதென கவனி, எண்ணத்தை கவனிப்பதே ஒரு சுகம்தான் உன்னைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ளலாம். அதனை கண்டு மிரளாதே, சலிப்படையாதே, வெறுப்படையாதே கவனி கவனி கவனித்து சீர் செய்யப்பார். தினமும் ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பாக தொடர்ந்து வரும் எண்ணங்களை, சிந்தனைகளை எழுதிக் கொண்டே வா, ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் எழுதிக்கொண்டே வா. எந்த சிந்தனை எந்த எண்ணங்களால் தவறு செய்தாய், சிக்கலுற்றாய் என பார். தொடர்ந்து இவ்வாறு செய்து வர உன் சிந்தனையில் ஒழுங்கு கிடைப்பதை நீயே காண்பாய். மகிழ்ச்சியடைவாய். செய்து பார். சவாலான நேரங்களில் என்ன முடிவெடுத்தாய், எப்படி முடிவெடுத்தாய் என யோசி, எப்பொழுதெல்லாம் கூத்தடிக்கும், களியாட்ட, கெளித்தல் எண்ணங்கள் தோன்றுகின்றன என விழிப்பாய் இரு. ஒரு நாளைக்கு எத்தனை முறை பொய் சொல்கிறாய், பேராசையில், காமத்தில், பொறாமையில், காழ்ப்புண்ர்ச்சியில், கேடு கெட்ட விதமாக எண்ணங்கள் ஓடுகின்றன என கவனித்துக் கொண்டே தேவையில்லாமல் வரும் கற்பனையான, செயல் படுத்த முடியாத, செயல் படுத்த முடியாத எண்ணங்களை சீர் செய்ய வேண்டிய உறுதியுடன் இரு. மூளையை வெறும் 17விழுக்காடு சிந்திக்க பயன் படுத்தியவர்கள்தான் விஞ்ஞானிகள். அது போல் தினமும், வாரத்தில் மூன்று, நான்கு முறை மூளையை பயன் படுத்தி சிந்தித்த ஒருவன் மிகப்பெரிய வெற்றியாளனாக மாறுகிறான் என்று பெர்னாஷா சொல்கிறார். தினமும் அரை மணி நேரம் வாசிப்பவர்களுக்கு மூளை நன்றாக சிந்திக்க உதவும். நல்ல புத்தங்களை தெரிவு செய்து வாசிப்பை தொடரும் ஒருவருக்கு வாழ்க்கை செம்மையாவத்ற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் அந்த புத்தகமே சொல்லிக் கொடுக்கும். அதனால் சிந்தனையில் ஒழுங்கு வர வாசிக்க தொடர்.சிந்தனை மாற்றமே எல்லாவற்றின் மாற்றத்திற்கும் அடிகோளும்.

 • உணர்ச்சியில் ஒழுங்கு 

               மனதில் எழும் உணர்ச்சிகளை உன்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதை விட்டு விட்டு அந்த உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நீ செயல்பட்டால் நீ அந்த உணர்ச்சிகளுக்கு நல்ல அடிமையாகி விடுவாய். மனதில் எழும் உணர்ச்சிகளை மொத்தம் 58 என கணக்கிட்டுள்ளனர், அதில் தீயனவற்றை ஆறு வகை படுத்தியுள்ளனர். பேராசை, சினம், கவலை, கடும் பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி. இங்கே மனதில் எழும் உணர்வுகளை அது தரும் மனப்பாங்கையும், அந்த உணர்வுகளோ, உணர்ச்சிகளோ ஏற்படும் போது உடலில் என்ன வகையான மாற்றம் நிகழ்கிறதென நன்றாக கவனித்தாலே எது வேண்டும் எது வேண்டாம் என ஒழுங்கு செய்ய முடியும். உணர்ச்சிகளின் தொகுப்புதான் மனித மனம் அதில் எப்போது என்ன அலைச்சுழல் ஏற்படுகிறதோ அதைப் பொருத்து உடலிலோ, மனதிலோ, மூளையிலோ ஒரு வகையான பொருந்தாவுணர்வு எழுந்தால் அது வேண்டாமென முடிவெடுக்க வேண்டியதுதான். மகிழ்வும் பொருந்திப் போகும் உணர்வும் எப்போதும் அமைதி தரக் கூடிய மன எழுச்சிகளை உனக்கோ, பிறருக்கோ துன்பமளிக்காத உணர்ச்சிகளை ஏற்று செயல் பட வேண்டும். உனது இலட்சியத்தையோ, உனக்கு தேவையானவற்றைச் செய்ய விடாது தடுக்கும் உணர்ச்சிகளையும், உன்னை அடிமைப் படுத்தும் உணர்ச்சிகளையும், உனது பாதையின் போக்கை தவறாக மாற்றக் கூடிய உணர்ச்சிகளையும் நீயே கண்டறிந்து நிறுத்த வேண்டும். உணர்ச்சிகளை மனதொடு போட்டு மல்லுக்கட்டி சிக்கலுக்கு உள்ளாக்க கூடாது. மனதையே சாட்சியாகவும், மனதையே நீதிபதியாகவும் வைத்து உனது மனதில் எழும் உணர்ச்சியலைகளை ஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டுமென வேதாத்ரி சொல்கிறார். உணர்ச்சியால் சிக்கலுக்குள்ளான காலங்களையும் மனிதர்களையும் அதன் விளைவுகளையும் நினைத்து பார். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி வாழ்வில் வெற்றிக் கண்டவர்களையும் நினைத்துப் பார். உன் மனம் தேங்காய் போன்றது எது வேண்டுமுனக்கு இனிக்கும் தண்ணீரா?, இல்லை தேங்காய்த்துருவலா? இல்லை அதன் ஓடா? தேங்காய் மட்டையா? உன் மனதில் எழும் தேவையற்ற, உன் நல்ல செயலை தடுக்கும் உண்ர்ச்சிகள் தேங்காய் ஓட்டையும் மட்டையையும் போன்றதே நீயே முடிவு செய்.

 • செயலில் ஒழுங்கு 
            
              செயலே உனது முகத்தைக் காட்டும் கண்ணாடி. சின்ன சின்ன செயல்களில் ஒரு மனிதனை மிக எளிமையாக எடை போட்டு விடலாம். முன்பு சொன்ன அதே மேக்ஸ்வெல் சொல்கிறார் ஒழுங்கு என்பது சரியானவற்றை சரியான நேரத்தில் சரியான காரணத்திற்காக செய்வதே ஆகும். உன் ஒவ்வொரு செயலிலும் நீ ஒரு ஒழுங்கை கடைப் பிடிக்க வேண்டும். உனது கண்ணாடி மேசை, நீ படிக்கும் இடம், உனத் எழுதும் நோட்டு, புத்தக அறை, படுக்கும் அறை இன்னும் நன்றாக சொல்ல வேண்டுமானால் உனது கழிவறையை நீ எவ்வாறாக பராமறிக்கிறாயோ அவ்வாறே உனது செயலொழுங்கு அமையும். நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியுடன் செய்ய பழக வேண்டும்.சவாலான செயல்களையும் மிக நிதானமாக செய்ய பழகிக் கொள். உனது உணவு நேரத்தை ஒரே மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழகு, நீ தொடர்ந்து தினமும் செய்யும் சில செயல்களை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாமல் அதனை சரிவர கடைப் பிடி, அதில் சில கொள்கைகளை வைத்துக் கொள். உதாரணமாக சரியாக காலை 8 மணிக்கு காலை உணவு எடுத்துக் கொள்வதை கடைப் பிடிப்பது, காலையில் எழுவதை தினமும் ஒரே மாதிரி செய் அதாவது காலை 5 மணிக்கு முன் எழுந்து பழகு. நான் எனது வாழ்வில் ஒரு பெண்மணியை சந்தித்தேன் பிரான்ஸ் நாட்டிலிருந்து சரியாக கிறிஸ்மஸ்துக்கு வந்து இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு உதவுவார் இது ஒரு வகையான நல்ல செயலாக, கடமையாக இருப்பார். எனது அப்பா டீக்கடை வைத்துதான் எங்களை நான்கு பேரை டிகிரி வரை படிக்க வைத்தார் சரியாக மாலை 3 மணிக்கு தின்மணி படிக்க ஆரம்பித்தால் ஒரு மணி னேரம் அந்த பேப்பரின் முழுதையும் படிக்காமல் வைக்க மாட்டார். அது போல் நீ செய்யும் செயலை கடமையாக செய்து அச்செயலின் பயனால் இப்பூவுலகம் நன்மை பெற உள்ளதென்ற நினைவிலும் பொறுப்புடனுமே செயலாற்ற வேண்டும். உனது ஒவ்வொரு செயலையும் உனது இலட்சியத்துடன் இணைத்து மாறாது கொள்கை பிடிப்புடன், வைராக்கியத்துடன் தொடர்ந்து செய்யும் போது அதற்கான பயனை, விளைவை, புகழை, உயரத்தை நீ அடைவாய். மறவாதே செயலே உனது முகத்தை அகத்தை காட்டும் கண்ணாடி. விழிப்பு நிலை தவறாது நீ பாதை மாறாமல் இந்த சமூகத்திற்கு பயன் தரும் செயலை மட்டுமே செய்வேன் எனௌறுதியும் நுட்பத்துடனேயே செயலாற்ற வேண்டும்.

 • பழக்கத்தில் ஒழுங்கு 

              தொடர் செயலே பழக்கமாகி, வழக்கமாகி, பண்பாடாகி, ஆளுமைத்திறனாக மாறுகிறது. எண்ணம், சொல், செயல், மன உணர்ச்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு வித நல்ல பழக்கங்களை வலிந்துதான் பழகிக் கொள்ள வேண்டும் இந்த உலகத்தில் நல்லவனாயிருக்கத்தான் வலிமை வேண்டும். மன்ம் பலகீனப் பட்டிருந்தால் உன் செயலின் விளைவாக சீக்கிரமே மரணம் வந்து விடும் அதனால் உனக்கோ, உனது குடும்பத்துக்கோ, இந்த சமுதாயத்திற்கோ நிச்சயமாக பலனில்லை. நீயே யோசித்துப் பார், கேடு செய்தவர்களின், எல்லோருக்கும் தெரிந்தோ, தெரியாமேலோ தவறான பழக்கத்தை வைத்திருந்தவர்களின் இன்றைய நிலையென்ன. கணக்கிட்டு பார் யாரால் இந்த உலகிற்கு நன்மை, எப்பழக்கம் எல்லோரையும் வாழ வைத்துள்ளதென. எண்ணம், உணவு, உறக்கம், உழைப்பு, உடை, ஓய்வு, சிந்தனை, புத்தக வாசிப்பு, இசை, நல்லோர் உரை கேட்டல், பெரியோருக்கு குழந்தகளுக்கு உதவுதல் என சிலவற்றை தொடர்ந்து பழகுதல் நன்று. சிலவற்றில் அளவு முறை பேணுதல் அவசியம் என்கிறார் வேதாத்ரி. உனக்கும் பிறருக்கும் மகிழ்வு தரும் நல்ல பழக்கங்களை ஒழுங்குடனும் நேர்த்தியுடன் செய்தல் நன்று. எண்ணமே வேர் பிடித்து சொல்லாகி, செயலாகி, மன எழுச்சியாகி, உணர்ச்சியாகி, செயலாகி பழக்கமாகி நல் விருட்சமாகி நிழல் தரும் உணர். Dr.S.Saminathan

வியாழன், 18 ஏப்ரல், 2019


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை 2. அகமும் புறமும் எவ்வாறோ, அகம் அவ்வாறே எண்ணத்தின் அறமே, சிந்தனை அறம், சிந்தனை அறமே செயலின் அறமாகும். புறமனத்தில எழும் எண்ணங்கள் நடு மனத்தில் நினைவலைகளாக, சிந்தனைகளாக இருந்து மேலும் அதுவே ஆழ்மனதிற்கு செல்லும் போது நம்பிக்கையாக மாறி அதுவே மனப்பாங்காக மாறியும் ஆளுமையாகவும் வெளிப்படுகின்றது, திரும்ப திரும்ப எண்ணப்படும் ஒன்று தரப்பதிவாக மாறி வித்தில் கலந்து கருமையத்தில் பதிந்து பல தலைமுறைக்கு அவ்வெண்ணம் பயணிக்கிறது பின்பு வாய்ப்பு கிட்டும் போது செயலாக மாறுகிறது அல்லது செயலாக மலர்த்த மனதை உந்தி தள்ளுகின்றது இந்த விசயத்தை தர்க்கமின்றி நன்றாக மனதில் திரும்ப திரும்ப சிந்தித்து பதித்துக் கொள். உன்னை சுற்றிலும் பார், பிறகு அகத்திலும் பார், எவ்வகை எண்ணத்துடன் பயணிக்கிறாய், என்ன வகையான உணர்வுடைய மக்களுடன் பழகுகிறாய், பேசுகிறாய் என்றும் பார், அதுபோல உன்னுடன் யார் யார் என்ன வகையான உணர்வுடைய நட்புகள், உறவுகள் அமைந்துள்ளன என பார்த்துக் கொள். இது வெறும் ஒப்பீடல்ல உன்னுடைய அகச் சுத்தத்தை தராசு கொண்டு நிர்ணயிக்க மட்டுமே அப்படியான அளவீட்டை பார்க்கும் போது அது பொது நியதியான, துன்பம் விளைவிக்காத தன்மையான எண்ணமாக உள்ளதாவென அளவிடு, அதாவது அகத்தினால் புறமும் புறத்தினால் அகமும் உருவானதை சூட்சுமத்தை அறிந்து கொள். அகத்தை உறுதி செய்ய எண்ணத்தை வலிமை படுத்து, நல்ல எண்ணத்தில் திளைக்கச் செய் நல்ல அற நெறிகளை விரும்பி ஏற்று மனதில் தழைக்கச் செய். என் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்தே இதை சொல்கிறேன் கேள். எனக்குச் சிறு வயது முதலே அச்சம் கொள்வது இயல்பாகி இருந்து வந்தது ஒரு பத்து வயது வரை இதுமாதிரியான எண்ணங்கள் வரும். அந்த தருணத்தில் எனக்கு சூட்டுக்கார சோமு தாத்தாவினது பழக்கம் கிடைத்தது நண்பனுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்ல கழிமுகமான அலையாத்திக் காட்டுக்குள் செல்ல பழக்கும் போது அவர் தொடர்ந்து அச்சப்பட கூடாது அச்சம் தவிர் என்று தைரியமான கதையாக சொல்லுவார் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை பாடலை சொல்லிக் கொடுத்தார், குளிரான தண்ணியில என்னையத் தள்ளி விடச் சொல்லுவார், அடுத்த கரைக்கு தனியாக நீந்திச் செல்ல சொல்லுவார். உடலை பராமறிக்கச் சொல்லித்தருவார். அவரின் வழிகாட்டுதல் அப்போது நல்ல பாடமாக அமைந்தது. உனக்கான அகத்திலிருந்து புறப்படும் மலரின் வாசனையே உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு வாசத்தை தந்து அவர்களை உன் பக்கமாக இணைக்கின்றது. புறம் அப்படியே இருக்கிறது அதை உனது அகமே வெவ்வேறாக மனதின் எண்ண எழுச்சிக்கு தகுந்தவாறு நினைவுகளாக அனுபோக, அனுபவ அடிப்படையில் பிரித்து வேறு படுத்தி பார்க்கின்றது. இந்த இடத்தில் உனக்கு ஒரு கேள்வி எழுந்து வரும் ஒரு தேளை பார்க்கிறோம் அது கொட்டுமென தோன்றுமே என்ன செய்வது, அது போல சக மனிதனை சந்தேக பார்வையில் பார்க்கும் பலகீனமான, குறுகிய எண்ணம் தோன்றுமே என்ன செய்வது ஒன்னும் செய்ய வேண்டாம் எவ்வகையான எண்ணம் தோன்றினாலும் சிறிது நேரம் அமைதியாக கவனித்து உணர்வுகளை உற்றுக் கவனிக்க அதுவும் சக உயிர்தானே இப்பிரபஞ்சத்தில் அதுவும் ஒரு படைப்புதானே அது தன் வாழ்வியல் தகவமைத்து நகர்ந்து செல்கிறதென நினைத்துப் பார்த்தால் அதற்கான வாழ்க்கைக்கு சம அளவில் இடம் கொடுத்தால் அது ஏன் நம்மை கொட்டுவதற்கு வர போகிறது. அது போலவே சக மனிதனையும் நினைக்க வேண்டும் தன்னை, தன் அதிகாரத்தை நிறுவ நினைக்கும் உனக்கு கீழே ஒருவர் தேவை படுவதாலும், எதையோ எதிர் பார்த்தும், ஒரு பாதுகாப்புணர்வாலும் தன்னிடமிருந்து எதையோ பறிக்க வருகிறானெனவும் நாம் எதையோ இழக்கப் போகிறோம் என்றும் நினைக்கும் போது உனக்கு மனதில் பல நினைவுகள் பாதுகாப்பற்று எழுகிறது அது இன்ப உணர்வைத் தராது, பேரின்ப தந்து அமைதி தராத ஒரு எண்ணத்தை கொண்டிருந்தால் தொடர்ந்து நீ அமைதியின்மையால் குழப்பமடைந்து துன்பமடைகிறாய், குறுகிய பொறாமையால் தவிக்கிறாய், இயலாமையில் கூனிக் குறுகுகிறாய். அகத்தை சீர் செய், அகத்தின் கசடை போக்க நல்ல எண்ணங்களை வலிந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவையிலிருந்தும் ஆசையிலிருந்தும் வரும் எண்ணங்கள் வெவ்வேறு நிலையில் திரிபடைய வாய்ப்புள்ளது. கணித்தலும் விழிப்புணர்வும் மட்டுமே இயல்பான நல் எண்ணத்தை கொண்டு வரும், அதை வலிமையாக்கும். மேலும் அச்சத்தில்தான் பல வித பயவுணர்வுகளும் அது சார்ந்த பாதுகாப்பு அல்லது பாதுகாப்பற்ற எண்ணங்களை மனதில் கொண்டு வரும் என்ற அடிப்படையை நீ உணர வேண்டும். அதன் காரணங்களை ஆராய்ந்து, களைந்து, உணர்ந்து, திருத்தி அமைக்க வேண்டும். எண்ணத்தின் மூல வேரைப் பிடித்து உலுக்கி எடுக்க வேண்டும் இதுவொன்னும் சாதாரண வேலையில்லைதான் ஆனால் பழக்கத்திற்கு கொண்டு வா. பழகு, பழகிக் கொண்டேயிரு. உனக்கு பசிக்கிறதென வைத்துக் கொள், என்ன வகையான உணவை தேடிகிறது உன் மனம் என உணர்ந்து பார், தேவையினை ஒட்டியே உனது சிந்தனை எழும், பசிக்காத போதும் சாப்பிட வேண்டுமென எழுகின்ற ஆசையையும் உணர்ந்து பார், யோசி. நல்ல ருசியான சாப்பாடு கிடைத்தென நெஞ்சடக்குமளவு சாப்பிட்டு விட்டு செரிக்காமல் வயித்தால போகும் போது சிந்திக்கக் கூடாது. ஒன்றின் மீது வெறுப்பான எண்ணத்தையும் உமிழாது, ஒன்றின் மீது அதீத விருப்பான எண்ணத்தையும் பொழிய வேண்டுமா என யோசித்து நடை போடு. வாழ்க்கையை இரண்டின் மீதும் சரிசமமாக நடந்தே கடக்க முடியும் அதிலும் குறிப்பாக இன்பவுணர்வை மட்டுமே இயற்கை நமக்கு தர வேண்டுமென நினைக்கும் அதீத விருப்பமே, ஆசையே உன்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. நீயே நினைத்துப் பார், எதன் மீதாவது அதீத ஆசை கொண்டு கற்பனை எண்ணத்தை அதனை நோக்கி ஓட்டுகிறாய் என்னாகின்றது எதிர்ப்பார்ப்பு ஏமாற்றமாகிறது அது அப்படியே கிடைக்க உனது எண்ணத்தில் உறுதியும் நுட்பமும் பெறு அல்லது அதனை அப்படியே ஏற்க பழகு. புறத்தை குறை கூறிக் கொண்டு அலையாதே. புறத்தைக் கண்டு அச்சப்படாதே. வெறுக்காதே, எரிச்சலுறாதே.புறம் அப்படியே இருக்கும் போது அகமே மாறிக் கொண்டே உள்ளது புரிந்து நட. புறத்தின் மாற்றம் அகத்தை பாதிக்கச் செய்து அதுவும் அகத்தையே மாற்றும் வல்லமை கொள்கிறதௌயும் பார், உற்றுக் கவனி உன் அகத்தை. இக்கல்வியை நீயே தேடித்தான் முயன்றுதான் பெற வேண்டியிருக்கும். தொடர்ந்து முயன்று பார்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

எண்ணமாயிரு - என்னமாவது இரு நல்லவனாயிரு - விஞ்ஞான மெய்ஞான பார்வை


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை 1. எண்ணமே செயலுக்கான வேர் எண்ணமும் சிந்தனையுமும் தேவைகளை ஒட்டியே எழுகின்றன உடல் தேவைகள் அல்லது மனத்தேவைகளை, தேவையிலிருந்து பிறந்த எண்ணங்கள் பின் ஆசையாக மாறி நம்மை சில நேரங்களில் தடமோ திசையோ மாறிச் செல்ல வைத்து விடுகிறது. எண்ணத்தின் வழிதான் மனம் ஓடிக் கொண்டும் ஊசலாடிக்கொண்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எண்ணங்கள் சோப்பு நுரை குமிழிகளைப் போல் மனதில் எழுந்த வண்ணமாகவே உள்ளன. ஒன்று இறந்த காலத்தின் செயல்களை நினைந்து சிந்தனை செய்கிறோம் அல்லது கற்பனையாக எதிர் காலத்தை நினைத்து சிந்திக்க ஆரம்பிக்கிறோம். மனம் எண்ணங்களினால் எதிர் எதிர் திசையில் பயணமாகிக் கொண்டே தம்மை தாமே சலித்துக் கொண்டும் செல்கிறது.எண்ண ஓட்டமே மனமாகிருக்கின்றது. எண்ணமே உன்னை செதுக்கும் சிற்பியாக உள்ளதென வேதாத்ரி சொல்கிறார். ஆம் நம்மை முழுதும் வடிவமாக எண்ணமே செதுக்கி வைக்கின்றது ஆழ்ந்து சித்திதால் நம் உருவம் கூட எண்ணத்தின் மொத்த உருவமாகவே இருக்கும். எண்ணத்திலிருந்து பிறக்கும் சொற்களாகத்தான் மனிதன் இருக்கிறான். எண்ணத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்தால் உன் வாழ்க்கையில் சரியான நேர்கோட்டு பாதையில் பயணிக்காதவனாக மாறிவிடுகிறாய். நீயே எண்ணமாயிருக்கிறாய். உனது எல்லா இன்ப துன்பகளுக்கும் இவ்வெண்ணமே மூலமாக, விதையாக உள்ளது அந்த எண்ணத்தின் மூலத்தை கண்டறிந்து சீர் செய்வதை தொடங்க வேண்டும். மனோ பலமும் பலகீனமும் எண்ணத்தின் வாயிலிலிருந்தே தொடங்குகிறது. எண்ணம் பலகீனமானால் உள்வட்டமும் உன் காந்தமும் பலகீனமாகி விடுகிறது. அகமும் புறமும் பலகீனப்பட்டு விடுகின்றன. அதே எண்ணம் பலமாக, வலிமையுடையதாக இருந்தால் உள் வட்டமும், காந்த பிரகாசமும் வெளியும் சிறந்த பலமும் வலிமையுடையதாய் மாறி விடுகின்றன. உனது விதியெனப்படுவது இவ்வெண்ணத்தின் படிமமே. சிறு வயது முதல் நீ எண்ணிய எண்ணத்தின் அனுபோக அனுபவ பதிவின் விளைவே. அவைகள் மூளையில் நிறைந்து வழிகிறது அதுதான் இன்றைக்கு செயலாக சொல்லாக மலர்ச்சி பெற்று வருகிறது என்ற உண்மையை ஆழமாக சிந்தித்த பின்னரே எண்ணத்திற்கும் சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரிய தொடர் போராட்டம் நிகழ்வதை உணர்ந்து கொள்வாய். இயற்கையானது மனிதனுக்கு பலப்பல அனுபவங்களை தந்து கொண்டேயுள்ளது. அவ்வனுபவங்கள் அனைத்தும் நினைவுப் படுகைகளாக மாறி எண்ணமாக விரிகிறது. தீயது நல்லது என்ற , பகுப்பின்றி, பாகுபாடின்றி உன் மனதில் குமிழிகளாய் மேலெழுந்து வந்த வண்ணமே இருக்கின்றது. இனிமை, நிறைவு, மகிழ்ச்சி, அமைதி,இன்பம், அன்பு, சாந்தம், ஆனந்தம், பேரின்பம், பேராற்றல் என்ற சொற்களை நிதானைத்து மனதில் சொல்லிப் பாரு அந்த வார்த்தைகளை கேட்கும் போது உனக்குள் ஏற்படும் எண்ணத்தின் மாற்றத்தை எவ்வாறு உணர்கிறாய். அதுபோல் சோர்வு, நோய், சோகம், கவலை, பிணக்கு, சிக்கல், வலி, துக்கம், துன்பம், குழப்பம், பதற்றம் என்று நீ கேட்கும் போதும் நீ வேறு வகையாக உணர்கிறாய். அகத்திலிருந்து புறச்சிந்தனையிலும், புறச்சிந்தனையிலிருந்து அகத்திற்குள்ளும் நீ மாறி மாறி சென்றுக்கொண்டேயுள்ளாய். இந்த எண்ணத்தின் வழியில் நினைவாக, தொடர்ச்சியாக எழும் சிந்தனையின் வழியும், கற்பனையாக நினைவு வழியும் எண்ணம் தொடர்ந்து கொண்டேயுள்ளது. மனமும் அதன் பின் ஓடிக் கொண்டேயுள்ள போது செய்யும் செயலின் விளைவாக கிடைக்கும் அனுபோக அனுபவத்தை நீ பெற்றுக் கொண்டேயுள்ளாய். ஆற்று வெள்ளம் பள்ளத்தை நோக்கி விரைவது போல் உன் சிந்தனையின் வழியாகவே உனது ஆற்றல் அனைத்தும் முழுமையாக செயலாற்றுகின்ற உணர்வை நீ பெற வேண்டும். அப்படி ஊடும் நினைவலைகள் தீயவையாக இருந்தால், உனது ஆற்றல் முழுதும் தீயவையாக மாறி உன் ஆற்றல் களத்தை அது கெடுத்து விடுகின்றன. அவற்றை நீ மாற்றிக் கொள்வது மிக எளிதானதுதான். உன் நினைவு ஓட்டத்தை மடை மாற்றம் செய்ய வேண்டும் உனது கற்பனையானதை அவ்வெண்ண ஓட்டத்தை நல்ல விதமாக வலிந்து மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் அப்படி செயற்கையாக மாற்ற வேண்டாம். நீ எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பார்கள் ஆனால் அவர்களால் சில எண்ணத்தால் செயலாகிய பழக்க வழக்கத்தை சட்டென மாற்ற இயலாமல் பலகீனமாக தவிப்பார்கள் உன் மனமும் தவிக்கும். இந்த இடத்தில் இவ்வாசகத்தை சொல்லிக் கொள். உண்மையின் பக்கம் சிலரே இருப்பினும் நான் உண்மையின் பக்கமே எப்போதும் இருப்பேன் என்று திரும்ப திரும்ப மனதிற்கு ஒரு தன்னம்பிக்கை அறிவுரை அறவுரை சொல்லிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உனது உணர்ச்சி வயமான எண்ணம் செயலாக மலர்ந்து விடும். ஒரு எண்ணத்தை நீ எண்ணும் போது உனக்கும் உன் உள்ளுணர்வுக்கும் எந்த சிக்கலும் பதற்றமும் பயமும் இல்லையோ அவையே நல்லதாக இருக்கும். எந்த எண்ணத்தை எண்ணும் போது உடலில் சுகமாகவும், இன்பமாகவும், அமைதியாகவும் இருக்கிரதோ அதை உள்ளுணர்வும் இதமாக ஏற்றுக் கொண்டால் மட்டும் அந்த எண்ணத்தை மனதில் சுழல விடலாம். இல்லையென்றால் அவற்றை தவிர்த்து விட வேண்டும். உன் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலொழிய, உன் மனசாட்சி உறுத்தாமல் இருந்தாலொழிய, உன் அறிவு உறுத்தாமலிருந்தாலொழிய அந்த எண்ணத்தை நீ மனதில் சுழல விடலாம் மற்றவற்றை மனதில் சுழல விடுவது தவறாகி விடும். மனமும் அவ்வழியே பயணித்து நம்மை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். மனதின் நிலையே வாழ்வின் வளமாகும், எண்ணத்தின் வலிமையே, பலமே மனதின் மனிதனின் பலமாகவும் இருப்பதை நீ உணர்ந்து கொள். மனத்தின் பாங்கே மனிதனின் பாங்கு என வேதாத்ரி சொல்லியுள்ளார். மனம் செம்மையடைய செய்ய எண்ணத்தை செம்மையடையச் செய்ய வேண்டும். எண்ணமே இவ்வுடலையும் இயக்குகின்ற மாய வித்தையை மிக எளிமையாக நீ உணர்ந்து கொள்ளலாம் . நீ ஒரு திருவிழாவுக்கோ, சுற்றுலாவுக்கோ போக வேண்டுமென திட்டம் போட்டு அந்த எண்ணத்தை தீவிரமாக எண்ணி அந்த ஊரையோ, இடத்தையோ மனதில் கற்பனையாக நினத்து வருவாய் அப்படி செய்யும் பொதெல்லம் மனம் உடலை இயக்கி, செயலாற்றி உடலை தூக்கிக் கொண்டு அந்தா ஊருக்கு செல்ல அந்த திருவிழாவிற்கு செல்ல தயாராகி நிற்கும் அதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் உன்னை நீயே இயக்கி செய்து முடிப்பாய் அதையே நீ பல முறை உன் அனுபவத்தில் கண்டிருப்பாய். உனது தொடர்ச்சியான எண்ணமே உனக்கான நட்பு வட்டத்தை அமைக்கும் நல்ல ஆசானை கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நீயே தேடி செல்வாய். ஒரு அரசியல் கருத்தை நோக்கி உன்னை ஈர்க்கும், சினிமாவை நோக்கி, சினிமா நடிகனையோ, நடிகையோ நோக்கி ஈர்த்து செல்லும், இசையை, பாடலை, கவிதையை, புத்தகங்களை, என பல விசயங்களை நோக்கி உன்னை ஈர்த்து செல்லும் அல்லது நீ அவற்றை ஈர்ப்பாய் இதைத்தான் ஒத்த அலை வரிசை என்று சொல்லுகிறோம். அந்த அலை வரிசையின் தொடக்கப் புள்ளி உனது எண்ணமே என்பதை உணர்ந்து கொள். எண்ணமே உணர்வாக எழுகிறது உணர்ச்சியாகவும் எழுகிறது என புரிந்து கொள். உனது மனதில் எழும் எல்லா உணர்வுகளுக்கும் மூலம், உன் எண்ணமே காரண கர்த்தா அப்படியென்றால் உன் எண்ணத்தை எவ்வாறான சீர் திருத்தத்திற்கு கொண்டு வர வேண்டுமென நீயே யோசி. உனது எண்ணத்தின் தொடக்கமே காதலாக, நட்பாக, சினமாக, காமமாக, விரசமாக, வஞ்சமாக, கற்பொழுக்கமாக, உயர்வு தாழ்வு மனப்பான்மையாக, சாதிப் பெருமையாக, மதச் சண்டையாக, கருத்து மோதலாக, சாந்தமாக, அமைதியாக, அன்பாக, கருணையாக, இரக்கமாக, ஈகையாக என எல்லா இன்ப துன்ப உணர்வுகளாக மலர்கிறது. அதைத் தொடர்ந்த்து அந்த எண்ணத்தின் அழுத்தமே செயலுக்கு வருகின்றது என்பதை நீ உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல எண்ணத்தை உன் வழிக்கு கொண்டு வர வேண்டும், சீராக்கி, பண்பாக்கி, பக்குவப்படுத்த வேண்டும் அதையும் உன்னுடைய மனமேதான் செய்ய வேண்டுமே தவிர பிறர் யாராவது வந்து உனக்கு மாய வித்தை செய்து, ஒரு ஆள் வந்து மருந்து மாத்திரை தந்தோ, பூஜை செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நம்பிக் கொண்டிருக்காதே. அது உன் அகத்திலிருந்து எழுந்து வந்து மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு உனக்கே வேண்டும் எண்ணத்தின் வழி வரும் சிந்தனையும் மரபு நம்பிக்கையுமே கோட்பாடாக மாறி வாழ்க்கை விழுமியங்களை கொண்டு வருகின்றன அதுவே ஒரு பண்பாடாகவோ வாழ்க்கைக் கோட்பாடாகவோ அமைகிறது. எண்ணமே வாழ்வின் வளத்தையும் பல நேரங்களில் சீர் படுத்தாத எண்ணங்களால் மனதிற்கும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கு சீர் கேடாக அமைந்து அதுவே சமூகத்தின் நோய்க் கூறாக அமைந்துவிடுகிறது அதனால்தான் கருத்தியல்களை எதிர்ப்பதே நடக்கின்றது. சில நேரம் புதிய எண்ணக் கருத்துக்கு ஒத்து போகாத குழு சண்டைகள் அதிகமானதுமே காரணம். தண்ணீர் தன் மட்டத்தினை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது போலவும் அத்தண்ணீரே தனது வடிவத்தினை தேர்வது போலவும் உனது எண்ணத்தின் விதியே உன் வாழ்வின் விதியாகவும் அமைகின்றன. பார் உற்று பார், உனது அகத்தை பார் நீ யாராக உள்ளாய் என தினமும் உன் எண்ணத்தை எண்ணி பார்த்துக் கொள். எல்லா வினைகளுக்கும் அதற்கு சமமான ஒரு எதிர் வினை உண்டு என்ற விதியைப் போலவே எண்ணம்தான் மூலம் எனவும் அதனை சார்ந்தே உனது சொல்லும் செயலும் மனத்தன்மையும் அமையும் என்பதே விதி, உண்மை புரிந்து கொள் மனமே. எண்ணம் – சொல் – செயல் என்ற இந்த அடிப்படை கோட்பாட்டில் எண்ணமே முதல் படியில் உள்ளது அந்த அடிப்படையில் எண்ணத்தில் விசமென்றல் எல்லாமும் விசமாகும் அந்த வேரில் நல்ல சீர் திருத்தத்தை அடிப்படையிலேயே கொண்டு வந்து விட்டால் அவ்வெண்ணத்தை வைத்தே நல்ல ஆராய்ச்சி செய்யவும் அறிவையும் சிந்தனை முறையையும் மாற்றி அமைக்கலாம் என்று ஒப்புக் கொள். எண்ணத்திலிருந்தே சிந்தனை மலருகிறது அதுவே பின்னாளில் அறிவுக் கோட்பாடாக மாறுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளும் மனதிற்கு வாழ்க்கையை எளிமையாக்கி துன்பத்திலிருந்து விடுபடவும். சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து நல்வாழ்வை எட்ட முடியுமென சுயமாக சிந்தித்து நம்பு. நீ எண்ணும் எண்ணம் இந்த பிரபஞ்சத்திலும் பதிந்து அவைகள் விளைவாக மலர்கிறதென்ற விஞ்ஞானத்தை புரிந்து கொண்டு செயலாற்று. #துவாரகா சாமிநாதன்

செவ்வாய், 20 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு -351குறள்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -355குறள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. -423குறள்.

மெய்பொருள் என எதைச் சொல்கிறார் அப்படியான உண்மைப் பொருள் என்ன இந்த உலகில் உள்ளது. பொருள் என்று நாம் பார்க்கும் யாவையும் அணுவின் கூட்டு நிகழ்ச்சிதான் ஐந்து பௌதீகப் பொருளில் கூட அணுவின் கூட்டும் இருக்கையில் எல்லாமே நிகழ்ச்சிதான். நமக்கு கற்பிக்கப் பட்ட உண்மையை பகுத்தறிவு கொண்டு பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் பொய்யான உண்மை உண்மையான உண்மை எல்லாம் இருக்கிறதாவென ஒரு கேள்வி எழுகிறது. இதுதான் வள்ளுவரின் பொருள் முதல்வாதமா. மெய்ப்பொருள் எல்லாவற்றுள்ளும் இருக்கும் அறிவை உணர்தல் அறிதல் என்று எடுத்துக்கொண்டால் நமது சிந்தனைக்கு உவப்பாய் இருக்குமென நினைக்கிறேன். நாம் முன்னமே சொன்ன பேரறிவு சிந்தனையே சரியான தெளிவான உண்மையான பொருளாக இருக்கும். அணுவே அலைதான் எனும் போது அணுவை இயக்கும் மூலப்பொருள் என்னவாக இருக்கும் அலையே அல்லது அலையில்லா தன்மை கொண்ட பேரறிவே அதையே பரமானு என்று சித்தர்கள் சொல்கிறார்கள். வேதாத்ரி இறைத்துகள் என்கிறார். நாம் இங்கே பேரறிவு என்று எடுத்துக் கொள்கிறோம்.

ஒரு செங்கல்லை எடுத்து கொண்டு இடித்து பொடியாக்கி காற்றில் தூவி விட்டு பார்த்தால்பொருளாக இருந்த பொருள் காற்றில் கலந்து பரமானுத் துகளாக மாறி விடுகின்றன. மனித உடலும் மரணித்த பின் இப்படியான நிகழ்வே நடக்கிறது. இவ்வணுவை கூட்டியோ பிரிப்பதே சித்து விளையாட்டான அகிமா மகிமா எல்லாம். தற்போதைய விஞ்ஞானம் காற்றில் அணு திணிவைக் கூட்டி திரையாக பயன்படுத்தும் தொழில் நுட்பமே அந்தரத்தில் சினிமா  முறை முயற்சி. (ஆய்வுக்குட்பட்டது).

அறிவு என்பது எப்போதும் மெய்யான பொருளை உணர்வதற்கான முயற்சியில் பகுத்தறிந்து பொருளில் நிகழ்வில் உயிரில் செயலில் இருக்கும் உண்மையான இருத்தலை பேரறிவை பேராற்றலை காலத்தை நுண்ணுணர்வை சமதளச்சீர்மை துல்லியத்தை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்பதே ஆகும்.

#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

திங்கள், 19 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

ஞானம் வீட்டைக் கட்டும் மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.(20)

விவிலியம் நீதிமொழிகள் 24:20

அறிவை வளர்த்துக்கொள்வதென்பது மனதை அகலப்படுத்தும் வேலையே அறிவே மனதின் உள்ளத்தின் உயிரின் உடலின் மெய்ப்பொருளாக உட்பொருளாகயிருந்து செயல்படுகிறது
அறிவை வளர்ப்பதென்பது எழுத்தறிவு தொழிலறிவு பட்டறிவு மட்டுமல்லாது எல்லாவற்றிலும் அறிவாக இயங்கும் மெய்யறிவை உணர்வதே ஞானமென்கிறோம் அதுவே உனது மனதின் அறைகளை பல பொருட்களைக் கொண்டு நிரப்பும். பல வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். அவைகள் மனிதனை மனிதனாக நேசிக்கும் சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டி பொருட்களில் உயிர்களில் பேரறிவு இயங்கும் சமநிலையை புரிந்து கொண்டு   தன் தேவையுணர்ந்து பிறர் தேவையை குறிப்பறிந்து கூட்டி குறைத்து செயலாற்றும் சமூகத்தொண்டாற்றும் அறப் பண்பை வளர்க்கும்.
தேவையுணர்ந்தால் உரிமைகள் சமநிலையடையும் இல்லையானால் உணராது அறிவற்ற பண்பற்ற செயலில் ஈடுபடும் பிறர் சுதந்திரத்தை பறித்தல் பிறர் தேவையைத் தடுத்து உரிமையையும் வாழும் நிலையையும் கெடுக்கும் மிருக பதிவில் இயங்கும் மனம். அவ்வழியான பழக்கத்தை பண்பாடாக கொண்ட போர்ப்பழக்கத்தை தாண்டி வந்தும் இன்னும் இடம் பொருள் சாதி மத இன மொழிப் பற்றில் மனம் குறுகி நின்று சிந்தித்து பிறரை துன்பத்திற்குள்ளாக்கிற குறையறிவை மாற்றவே புதிய பழக்கமான மெய்யறிவு பேரறிவு பகுத்தறிவு சிந்தனை பழக்கத்தை நம் முன்னோர்கள் எடுத்துச் சொன்னார்கள் பழக்கமே புதிய பண்பாடாக மாற வேண்டும். புதிய சிந்தனைக்கு மனதை பழக்கி அறிவை அறிவோம். எவ்வகையான பாகுபாடுமின்றி அற வழியில் வாழ்வோம்
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

ஞானம் வீட்டைக் கட்டும் மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.(20)

விவிலியம் நீதிமொழிகள் 24:20

அறிவை வளர்த்துக்கொள்வதென்பது மனதை அகலப்படுத்தும் வேலையே அறிவே மனதின் உள்ளத்தின் உயிரின் உடலின் மெய்ப்பொருளாக உட்பொருளாகயிருந்து செயல்படுகிறது
அறிவை வளர்ப்பதென்பது எழுத்தறிவு தொழிலறிவு பட்டறிவு மட்டுமல்லாது எல்லாவற்றிலும் அறிவாக இயங்கும் மெய்யறிவை உணர்வதே ஞானமென்கிறோம் அதுவே உனது மனதின் அறைகளை பல பொருட்களைக் கொண்டு நிரப்பும். பல வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். அவைகள் மனிதனை மனிதனாக நேசிக்கும் சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டி பொருட்களில் உயிர்களில் பேரறிவு இயங்கும் சமநிலையை புரிந்து கொண்டு   தன் தேவையுணர்ந்து பிறர் தேவையை குறிப்பறிந்து கூட்டி குறைத்து செயலாற்றும் சமூகத்தொண்டாற்றும் அறப் பண்பை வளர்க்கும்.
தேவையுணர்ந்தால் உரிமைகள் சமநிலையடையும் இல்லையானால் உணராது அறிவற்ற பண்பற்ற செயலில் ஈடுபடும் பிறர் சுதந்திரத்தை பறித்தல் பிறர் தேவையைத் தடுத்து உரிமையையும் வாழும் நிலையையும் கெடுக்கும் மிருக பதிவில் இயங்கும் மனம். அவ்வழியான பழக்கத்தை பண்பாடாக கொண்ட போர்ப்பழக்கத்தை தாண்டி வந்தும் இன்னும் இடம் பொருள் சாதி மத இன மொழிப் பற்றில் மனம் குறுகி நின்று சிந்தித்து பிறரை துன்பத்திற்குள்ளாக்கிற குறையறிவை மாற்றவே புதிய பழக்கமான மெய்யறிவு பேரறிவு பகுத்தறிவு சிந்தனை பழக்கத்தை நம் முன்னோர்கள் எடுத்துச் சொன்னார்கள் பழக்கமே புதிய பண்பாடாக மாற வேண்டும். புதிய சிந்தனைக்கு மனதை பழக்கி அறிவை அறிவோம். எவ்வகையான பாகுபாடுமின்றி அற வழியில் வாழ்வோம்
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா