செவ்வாய், 10 மார்ச், 2015

முட்டத்தட்டு எங்கப்பன் தட்டு


'அப்பன் தட்டை எடுத்து போடா' ஆத்தா சொல்லிச்சு தட்டுக்கு நான் போட்ட சண்டையெலாம் நினைவுக்கு வந்துச்சு அண்ணமாரு சாப்பிட்ட அதே தட்டுதான் முட்ட வடிவ தட்டுக்கு குட்டு வாங்கி அழுத ஞாபகம் வந்துச்சு தாய் மாமன் பேரு வடிச்சிருக்கும் எத்தன காலமது பரணியில கிடந்துச்சு அப்பன் போன கவலயெல்லாம் ஆத்தா கண்ணீரா அந்த தட்டில் வடிச்சிருப்பா... அண்ணமாரு சாப்பிட்டது அவுகளும் இப்போ அக்கர சீமையில அப்போ படிக்க 'ஆஸ்டலுக்கு' போனயென்ன ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' தட்டுக்குச் சண்டயிட்ட நாங்க சொத்துக்கும் சண்டையிட்டு தனியாக போறப்ப ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' மோர் பிசைந்து சாப்பிட்டப்ப அப்பன் சாப்பிட்ட அலகயும் ஆத்தா நெனவயும் அந்த தட்டு காட்டிச்சி.. அப்பன் ஆத்தா கூடயில்லஇ தட்டுமட்டுமிருக்கு தட்டுல ஒன்னுமில்ல உசிருல நெனவிருக்க கன்னுக்குள்ள அப்பன் முகம் தட்டுலயும் தெரிஞ்சிச்சு எம்புள்ள சாப்பிட எடுத்து வைக்க ஆசப்பட்டன் எம்புள்ள சாப்டும்போது எம்மொகம் வருமான்னு தெரியிலயே எத்தன நா இச்சோகம் இருக்குமுன்னு அறியலயே நெனவ வச்சு உசிர ஏம்படச்சான் அப்பன் சோறூட்ட அதே தட்டுல சாப்பிடுறா எம்மக இப்போ தட்டுல உப்பா எங்கண்ணீரு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக